டாக்டர் இல்லாத இடத்தில்... - தினமணி தலையங்கம்
தமிழகத்தில் போலி மருந்துகள், காலாவதி மருந்துகள் பிரச்னை பெரிதான பின்னர், இப்போது போலி மருத்துவர்கள் பிரச்னை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் 2,000 போலி மருத்துவர்கள் இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் ஒரு பட்டியலை தமிழக காவல்துறைத் தலைவர் லத்திகா சரணிடம் அண்மையில் அளித்துள்ளது. இவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் இவர்களது கோரிக்கை.
மாவட்ட வாரியாக போலி மருத்துவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, குறிப்பாக கிராமப் பகுதிகளில் செயல்படும் இத்தகைய போலிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தரப்பட்டுள்ள இந்தப் பட்டியலை இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளிப்படையாக அறிவித்திருந்தால், காவல்துறை நடவடிக்கை எடுப்பது ஒருபுறம் இருக்க, மக்களே அவர்களைக் கண்டு ஒதுங்கிவிட வழிவகுத்திருக்கும். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை.
இந்தப் போலி மருத்துவர்கள் தங்களைத் தாக்கிவிடுவார்கள் என்ற அச்சம் இதற்குக் காரணமாக இருக்குமானால், உண்மையான எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்று, தனியாக கிளீனிக் வைத்திருப்பவர்கள் யார்யார் என்றாகிலும் அவர்கள் மாவட்ட வாரியாக அறிவிக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டு கிளீனிக் நடத்துவது அம்பலமாகிவிட்டால் என்ன செய்வது? ஆகவே, போலிகளின் பட்டியலை காவல்துறைத் தலைவரிடம் கொடுப்பது வெறும் கண்துடைப்பாக முடியுமே தவிர, இதனால் வேறு பயன் ஏதும் இருக்கப்போவதில்லை.
இந்த நடவடிக்கையும்கூட, உயர் நீதிமன்றம் ஒரு வழக்கின்போது, உண்மையில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற மருத்துவர்கள் யார்யார், போலி மருத்துவர்கள் யார்யார் என்பதைப் பட்டியலிட வேண்டும் என்று அறிவித்ததால் எடுக்கப்பட்டுள்ளதே தவிர, சமூக நலன் கருதி அவர்களாகவே மேற்கொண்ட நடவடிக்கை இல்லை.
இந்தப் பட்டியலைப் பார்க்காமலே யாரும் சொல்லிவிடக்கூடிய ஒரு விவரம் என்னவெனில், இதில் இடம்பெற்றிருக்கும் போலி மருத்துவர்கள் பட்டியலில் மிகச் சிலரே உண்மையான போலிகள் என்பதும் மற்றவர்கள் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி என இந்திய மருத்துவ முறைகளில் பட்டம் பெற்ற மருத்துவர்கள் என்பதுமாகும்.
இவர்களுக்கு உடற்கூறுஇயல் அத்துபடி. ஆனால், இவர்கள் எழுதித் தரும் மருந்துகள் அல்லது ஊசிகள் அலோபதிக்கு உரியவை. சிலர் பொதுவான ஊசிமருந்து செலுத்துவதிலும் ஈடுபடுகிறார்கள் என்பதால்தான் இவர்களைப் போலி மருத்துவர்கள் பட்டியலில் சேர்க்கிறது இந்திய மருத்துவர் சங்கம். இது தவறுதான்.
ஆனால், கிராமப்புறங்களில் மருத்துவர்களே இல்லாத நிலையில், உண்மையான மருத்துவர்களுக்கு கிராமங்களில் பணியாற்ற மனம் இல்லாத நிலையில், இந்த மருத்துவர்களை மக்கள் தெரிந்தே ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் நடைமுறை உண்மை.
இந்தப் பட்டியலைக் காவல்துறைத் தலைவரிடம் கொடுத்துள்ள சங்கத்தின் தலைவர், இந்த மருத்துவர்கள் பாரசிட்டமால் மருந்தைக்கூட எழுதித் தரக்கூடாது என்று ஆவேசமாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், அலோபதி மருந்துக் கடைகளில், "வயிற்றுப் போக்கு கட்டுப்பட மாத்திரை கொடுப்பா' என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டுப் போவதை மட்டும் அனுமதிக்கலாமா? இதன் அடிப்படைக் காரணம் என்ன? வயிற்றுப்போக்கு என்று எந்த கிளீனிக் போனாலும், ரூ.100-க்கு அட்டை போட்டுவிட்டு, பிறகுதான் என்ன என்றே கேட்கிறார்கள் என்ற வியாபாரம்தானே காரணம்? அதனால்தானே மருந்துக் கடையிலேயே மாத்திரையைக் கேட்கிறார்கள்?
ஓர் அலோபதி மருத்துவர், அலோபதி மருந்துகளை எழுதித் தருவதுடன், ஒற்றைத் தலைவலிக்கு எப்படி மிளகு கஷாயம் தயாரித்துச் சாப்பிடலாம் என்பதையும் சர்க்கரை நோயை எந்தெந்த உணவின் மூலம் நோயாளி கட்டுப்படுத்தலாம் என்பதையும் வேனல் கட்டியின் மீது மஞ்சளைப் பூசுங்கள் அதுதான் சிறந்த மருந்து என்பதையும் சொன்னால், அவரை இந்த உலகம் ஏற்றுக்கொள்வதோடு, இந்த மண்ணின் மருத்துவப் பெருமையையும் உணர்ந்தவர் என்று பாராட்டப்படும்.
அதேசமயம், சித்தா, ஹோமியோபதி மருத்துவர், அலோபதி மருத்துவத்தின் சில அடிப்படைகளைத் தெரிந்துகொண்டு, மாத்திரைகளை எழுதிக்கொடுத்தால் அவரைப் போலி மருத்துவர் என்று சொல்லிவிடுவதா?
ஒரு சிறப்பு மருத்துவருக்குப் பாட்டி வைத்தியம் தெரிந்திருந்தால் எப்படிப் பாராட்டுக்குரியதோ அதைப்போல ஒரு சித்த மருத்துவர், ஹோமியோபதி மருத்துவர் அலோபதியின் அடிப்படை விஷயங்களைத் தெரிந்துவைத்திருந்தால் அது ஏன் தண்டனைக்குரியதாக மாற வேண்டும்?
கிராம மருத்துவர்கள் படிப்பை அறிமுகப்படுத்தி, கிராம மருத்துவர்களை ஊரகப் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற கொள்கையை மத்திய அரசு சொல்லி வருகிறது. இதற்குப் பதிலாக, கிராமங்களில் உள்ள சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு அடிப்படை அலோபதியைக் கற்றுத் தரவும் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்த அனுமதிக்கவும் செய்தால் இவர்கள் போலி மருத்துவர்களாகவும் ஆக மாட்டார்கள். கிராம மக்கள் சிறு நோய்களுக்கும் தடுப்பூசிகளுக்கும் நகரத்துக்கு வர வேண்டிய அவசியமும் ஏற்படாது.
கிராமப்புறங்களில் சிறுநோய்களுக்கும் காய்ச்சலுக்கும் மருத்துவர்கள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்ட நேரத்தில், "டாக்டர் இல்லாத இடத்தில்' என்ற புத்தகத்தை வெளியிட "யுனிசெஃப்' நிதியுதவி அளித்தது. அந்தப் புத்தகம், அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியானது; பெரும் வரவேற்பையும் பெற்றது. அந்தப் புத்தகம் மிகச்சிறந்த அறுவைச் சிகிச்சைகளைப் பற்றிப் பேசவில்லை. அது அடிப்படையில் வெறும் முதலுதவி மற்றும் சிறு மருத்துவம் என்ற அளவிலானதுதான்.
இத்தகைய புத்தகம், சாதாரண எழுத்தறிவுள்ள மனிதருக்கே பயனுள்ளதாக இருக்கும் என்றால், ஏற்கெனவே சித்தா, ஹோமியோபதி போன்று உடற்கூறுஇயல் அறிந்த மருத்துவர்களுக்குப் பயன்படுத்தக்கூடியதாக இருக்காதா என்ன?
இந்திய மருத்துவ முறைகளில் பட்டம் பெற்று, கிராமங்களில் பணிபுரியும் இத்தகைய மருத்துவர்களுக்கு அலோபதி மருத்துவத்தின் அடிப்படையிலும் பயிற்சி அளித்து, சிறுநோய்களுக்கு மருந்து அளிக்கச் சட்டப்படியாகவே அனுமதித்தால், கிராமங்களில் மருத்துவர்கள் இல்லை என்ற குறையைப் பெரிதும் போக்கிவிட முடியும். அவர்களைப் போலி மருத்துவர்களாக முத்திரை குத்த வேண்டிய அவசியமும் இருக்காது.